பணப்பிரச்சினையால் நல்ல பாடலை இழந்தேன்! -சீர்காழி சிற்பி
25 டிச,2016 - 08:10 IST
மலரினும் மெல்லிய, மகான் கணக்கு, யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ள வை என 25 படங்களில் பாடல் எழுதியவர் சீர்காழி சிற்பி. அவரது 26வது படம் கெத்து. அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் எழுதிய, தில்லு முல்லு பண்ணல, கெத்து கித்து காட்டல - என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து தற்போது நாடோடி கனவுகள், உண்மை, கள்வர்கள், மானே தேனே பேயே, சிறகடிக்கும் ஆசை, இமை, வனபத்ரகாளி உள்பட சுமார் 12 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படங்களில் மெலோடி, செண்டிமென்ட், குத்துப்பாட்டு என எல்லாவிதமான சூழலுக்கும் பாடல் எழுதியுள்ளாராம்.
இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கெத்து படத்தில் பாடல் எழுதிய பிறகு, சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார் சீர்காழி சிற்பி.
அதுகுறித்து அவர் கூறும்போது, சுமார் 15 நாளைக்கு முன்பு, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் பாட்டெழுத வருமாறு எனக்கு போன் செய்தனர். அதோடு, அரை மணி நேரத்திற்குள் ஜி.வி.பிரகாஷின் ரெக்கார்ட் டிங் தியேட்டருக்கு வருமாறு சொன்னார்கள். அதையடுத்து, நான் ஆட்டோ பிடித்தாவது சென்று விட வேண்டும் என்று ஓடினேன். ஆனால் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தது. அது பழைய ரூபாய் நோட்டு என்பதால், எந்த ஆட்டோக்காரரும் என்னை ஏற்றவில்லை. அதையடுத்து பஸ் பிடித்து பாதி தூரம் நான் சென்று கொண்டிருந்தபோது, ஜி.வி.பிரகாஷ் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. நீங்கள் சொன்ன நேரத்திற்குள் வரவில்லை. அதனால் இப்ப வரவேண்டாம் அப்புறம் கூப்பிடுறோம் என்றார்கள். ஆனால் பின்னர் கூப்பிடவே இல்லை. ஆக, பணப்பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அரை மணி நேரத்திற்குள் ஜி.வி.பிரகாஷின் ஸ்டுடியோவுக்கு சென்று அந்த பாடலை எழுதியிருப்பேன். சூழ்நிலை காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டது. அது பெரிய வருத்தமாக இருந்தது. இருப்பினும், விடா முயற்சி செய்து விரைவில் ஜி.வி.பிரகாஷ் மட்டுமின்றி மற்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதி விடவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் என்கிறார் பாடலாசிரியர் சீர்காழி சிற்பி.
0 comments:
Post a Comment