விஜயசேதுபதி ஈகோ இல்லாத நடிகர்! -சொல்கிறார் கதிர்
25 டிச,2016 - 08:56 IST
மதயானைக்கூட்டம், கிருமி படங்களில் நாயகனாக நடித்தவர் கதிர். தற்போது என்னோடு விளையாடு, சிகை, சத்ரு, விக்ரம்வேதா என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் என்னோடு விளையாடு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்துள்ள கதிர், விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். சிகை, சத்ரு படங்களில் தனி ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படங்கள் பற்றி கதிர் கூறுகையில், இப்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். இந்த நான்கு படங்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். இந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைத் ததே சந்தோசமாக உள்ளது. இந்த படங்களில் என்னோடு விளையாடு வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அதையடுத்து மார்ச்சில் சிகை, ஏப்ரலில் சத்ரு ஆகிய படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் திரைக்கு வருகிறது. அதன்பிறகு சில மாதங்களில் விக்ரம் வேதாவும் வெளியாகி விடும். ஆக, 2017ம் ஆண்டில் நான் நடித்து நான்கு படங்கள் திரைக்கு வரப்போகிறது. அதனால் அடுத்த ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு என்பது மட்டுமின்றி, இந்த படங்கள் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படங்களாகவும் உள்ளன.
மேலும், என்னோடு விளையாடு படத்தில் பரத்துடன் நடித்த அனுபவம் மாதிரியான விக்ரம் வேதா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்ததும் இனிமையான அனுபவமாக அமைந்துள்ளது. அந்த படத்தில் மாதவன்-விஜயசேதுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிப்பதால் நான் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் நான் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறேன். இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில் இந்த மாதிரி ஒரு நல்ல வேடம் கிடைத்தது பெரிய விசயம். அதோடு, விஜயசேதுபதியுடன் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து விட்டேன். தான் மட்டுமின்றி தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். முக்கியமாக ஸ்பாட்டை டென்சன் இல்லாமல் ஜாலியாக வைத்துக்கொள்கிறார். குறிப்பாக, அவர் ஈகோ இல்லாத நடிகராக இருக்கிறார்.
அடுத்தபடியாக மாதவனுடன் இணைந்து நடிக்கப்போகிறேன். அவரும் விஜய சேதுபதியைப்போலவே எனக்கு பிடித்தமான நடிகர் என்பதால் அவருடன் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் என்று கூறும் கதிர், இந்த படங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்து விடும் என்று தான் நம்புவதாக சொல்கிறார்.
0 comments:
Post a Comment