மோகன்லால் படத்தில் நடிக்க விருப்பமா..? - தேடிவரும் வாய்ப்பு..!
19 ஜூன், 2017 - 16:46 IST
தற்போது நடித்துவரும் 'வில்லன்' மற்றும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தை தொடர்ந்து, மோகன்லால் அடுத்ததாக மலையாளத்தில் நடிக்க இருக்கும் படம் 'ஒடியன்'. விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். ஒடியன் என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். கேரளாவில் உருவான முதல் கூலிப்படை என்றால் அது ஒடியன்கள் தானாம். அப்படிப்பட்ட ஒரு பிளாக் மேஜிசியனாகத்தான் இந்தப்படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம். இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி துவங்க இருக்கிறது.
தற்போது இந்தப்படத்தில் நடிப்பதற்காக வெவ்வேறு வயதுள்ள பிரிவுகளில் நடிகர்கள் தேவை என விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப்படத்தில் மோகன்லாலுடன் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றனவாம். இந்த கதாபாத்திரங்களின் சிறு வயது மற்றும் இளவயது கேரக்டர்களில் நடிக்கவும், இன்னும் சில கேரக்டர்களில் நடிக்கவும் 5-7, 10-14, 16-18 மற்றும் 21-24 ஆகிய நான்கு வகையான வயது பிரிவுகளில் நடிகர்கள் தேவை என அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, இதில் மோகன்லாலின் சிறுவயது கேரக்டரில் நடிக்க தேர்வாகும் நபர் ஆக்சன் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரிடம் களரி சண்டை முதற்கொண்டு சில தற்காப்பு சண்டை பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டி இருக்குமாம். இதற்காக உருவ அமைப்பில் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளில் மோகன்லாலை போலவே பிரதிபலிக்க கூடிய நபர் தேவை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment