ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை சவுந்தர்யா ஓட்டி வந்த கார், ஆழ்வார்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. கார் மோதியதில் ஆட்டோவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மணி என்பவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டோவும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆட்டோ மீது கார் மோதிய சம்பவம் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனே அந்த இடத்தில் கூட ஆரம்பித்தனர். காரை ஓட்டி வந்தது ரஜினியின் மகள் சவுந்தர்யா என்றதும், மேலும் பரபரப்பு கூடியது. உடனே, சம்பவ இடத்திற்கு நடிகர் தனுஷ் விரைந்து, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது.
தனுஷ் தரப்பிலிருந்து ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் கொடுக்கும்படி உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் சமரச பேச்சுவார்த்தையிலேயே இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment