தமிழ் சினிமாவில் சொல்லப்படாத சூழலுக்கு பாடல் எழுதியிருக்கிறேன்! -பாடலாசிரியர் வேல்முருகன்
22 பிப்,2017 - 08:58 IST
நிவின்பாலி நடித்த நேரம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் பாடலாசிரியர் வேல்முருகன். அதையடுத்து சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன் படத்திற்கு வசனம் எழுதிய அவர், தற்போது ஒரு கிடாயின் கருணை மனு, பட்டினப்பாக்கம், ரிச்சி ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இதில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத சூழலுக்கு பாடல் எழுதியிருப்பதாக சொல்கிறார் வேல்முருகன்.
அதுகுறித்து அவர் கூறுகையில், டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா இயக்கியுள்ள படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த், ரவீணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரகுராம் இசையமைத்துள்ளார். நான் அனைத்து பாடல்களை யும் எழுதியிருக்கிறேன். இந்த படத்தின் கதை எப்படி வித்தியாசமான சூழலில் உருவாகியிருக்கிறதோ, அதற்கேற்ப வித்தியாசமான பாடல் சூழல்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், கணவன் தனது மனைவியைப்பார்த்து பாடும் ஒரு மனைவி கீதம் உள்ளது. அது எல்லா கணவன்மார்களும் தங்களது மனைவிக்கு டெடிகேட் பண்ணுவது போன்று அமைந்துள்ளது.
ஹீரோ ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்கிறார். அப்போது, நீ எனக்கு சாதாரணமாக கிடைச்சிடல. உன்னை சாதாரணமாக விட்டுட மாட்டேன. கடைசி காலம் வரை உன்னை தாங்கிக்கொண்டிருப் பேன் என்று சொல்லுவது போன்று இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன.
குலசாமிதான் இந்த படத்தின் கண்டன்ட். கிராமத்து மக்களின் அதீத நம்பிக்கையை பற்றி இந்த படம் உருவாகியிருக்கிறது. வேறு ஏரியாவுக்கு மாறி சென்றபிறகும் தங்களது குலதெய்வம் இருக்கும் ஊருக்கு சென்று சாமி கும்பிடுவது காலம்காலமாக நடந்து வருகிறது. அதனால் இந்த படத்தில் குலசாமி பற்றி ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலை எழுதும்போது எனது குலசாமிதான் மனதில் வந்தார். நம்முடைய முன்னோர்களைத்தான் குலசாமியாக கும்பிட்டு வருகிறோம். அந்த குலசாமியை நோக்கித்தான் இந்த படம் செல்வதாக கருதுகிறேன்.
அதற்கடுத்து, கொலை சிந்து -என்றொரு புதுமையான பாடல் சூழல் இந்த படத்தில் உள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத சூழலாக கருதுகிறேன். அந்த காலத்தில் கொலை செய்து விட்டு பாடல் மூலம்தான் அந்த செய்தியை கடத்துவார்கள். அதன் பெயர்தான் கொலைசிந்து. அந்த வகையில் இந்த படத்தில் ஒரு கிராமமே சேர்ந்து ஒருவரை கொலை செய்திருக்கிறது. அந்த கொலையைப்பற்றி அந்த ஊர் மக்கள் பாடுவார்கள். இது தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். நடிகர் ஹலோ கந்தசாமி இந்த கொலைசிந்து பாடலை பாடியிருக்கிறார். மார்ச் மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவரும்போது அனைவரது பாராட்டையும் பெறுவது உறுதி. இந்த தருணத்தில் ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் எனக்கு புதுமையான சூழலில் பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன்.
0 comments:
Post a Comment