Saturday, February 18, 2017

ரஜினி படத் தலைப்புக்கு ஆசைப்படும் ஹீரோக்கள்


ரஜினி படத் தலைப்புக்கு ஆசைப்படும் ஹீரோக்கள்



18 பிப்,2017 - 13:53 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகத்தில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று அரசாங்கம் என்று அறிவித்ததோ அன்றிலிருந்தே படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் இயக்குனர்களுக்கு கடும் சிக்கல் வந்துவிட்டது. இன்றைய ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதை எதையோ தலைப்பாக வைக்கிறார்கள். இல்லையென்றால், பழைய படங்களின் தலைப்புகளை வைத்துவிடுகிறார்கள்.

பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் கெடுப்பதைப் போல பழைய படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு வைப்பதும் அந்தப் படத்தின் பெருமையைக் கெடுப்பது போலத்தான் என்று பழைய படங்களின் ரசிகர்கள் ஆவேசப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பை தங்களது படங்களுக்கு வைப்பதற்கு தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிகமாகவே ஆசைப்படுகிறார்கள்.

இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பை வைத்து, “நினைத்தாலே இனிக்கும் (2009) , பொல்லாதவன் (2007), முரட்டுக் காளை (2012) , போக்கிரி ராஜா (2016), பாயும் புலி (2015), தங்க மகன் (2015), படிக்காதவன் (2009), மனிதன் (2016), குரு சிஷ்யன் (2010), ராஜாதி ராஜா (2009), மாப்பிள்ளை (2011), தர்மதுரை (2016)” ஆகிய படங்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த் நடித்து 1980ல் வெளிவந்த 'முரட்டுக் காளை' படத்தை மீண்டும் ரீமேக் செய்து 2012ம் ஆண்டில் சுந்தர் .சி, சினேகா நடிக்க வெளியிட்டனர். இப்படி ஒரு படம் வந்து போனது என்பது கூட பலருக்குத் தெரியாது.

மேலே குறிப்பிட்ட படங்களில் 'நினைத்தாலே இனிக்கும், படிக்காதவன், மாப்பிள்ளை, தர்மதுரை' ஆகிய படங்கள் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றன. மற்ற ரஜினி பட பெயரை வைத்த படங்கள் அந்தந்த ரஜினி படங்களின் பெயர்களைக் கெடுத்த படங்களாகவே அமைந்தன.

மேலும், 'வீரா' என்ற பெயரில் ஒரு படம் விரைவில் வெளிவர இருக்கிறது. த்ரிஷா நடிக்கப் போகும் ஒரு படத்திற்கும் ரஜினி நடித்த 'கர்ஜனை' படப் பெயரை வைத்துள்ளார்கள். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'வேலைக்காரன்' என்ற பெயரை நேற்று அறிவித்துள்ளார்கள். ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பை அவருடைய மருமகனான தனுஷ், தான் நடித்த படங்களான 'பொல்லாதவன், படிக்காதவன், தங்கமகன், மாப்பிள்ளை' ஆகிய படங்களுக்கு வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'வேலைக்காரன்' எனப் பெயர் வைத்திருப்பது தனுஷ் தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயனுடைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்த 'வேலைக்காரன்' படப் பெயர் விவகாரமும் அவர்களுக்கிடையேயான மோதலை இன்னும் அதிகரிக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

இன்னும் சில நடிகர்கள் அடுத்தடுத்து ரஜினி படத் தலைப்புகளை வைக்கவும், அவருடைய ஹிட்டான படங்கள் சிலவற்றை மீண்டும் ரீமேக் செய்து நடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினிகாந்த் படத் தலைப்பை இன்றைய ஹீரோக்கள் பயன்படுத்துவதை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனங்கள் இனி அப்படி யாராவது ரஜினி படத் தலைப்பை வைக்க அனுமதி கேட்டால் தரக் கூடாது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


0 comments:

Post a Comment