பிளாஷ்பேக்: முதல் திருட்டு இசை தட்டு
04 பிப்,2017 - 10:35 IST
இப்போது ஒரு படம் வெளிவந்த உடனேயே அதன் திருட்டு விசிடி மறுநாளே வெளிவந்து விடுகிறது. இதற்கு முன்பு படங்கள் வெளிவராது, படத்தின் பாடல்கள் திருட்டு சிடியாக வெளிவந்தது. ஆனால் சினிமா பாடல்கள் இசைத் தட்டாக வெளிவந்த காலத்திலும் திருட்டு இசைத் தட்டு வெளிவந்திருக்கிறது. இதனை தொடங்கி வைத்த படம் சிந்தாமணி.
அந்தக் காலத்தில் ஒரு படம் வெளிவந்த சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு பிறகுதான் இசைதட்டு வெளிவரும். படத்தில் முழுநீள பாடல் இருக்கும், ஆனால் இசைத்தட்டில் அந்த பாடல் சுருக்கமாக 3 நிமிடத்தில் முடிவதாக இருக்கும். காரணம் இசைத் தட்டின் மெம்மரி பவர் அவ்வளவுதான். ஆடியோ ரைட்ஸ் வாங்கும் உரிமம் அப்போதும் இருந்தது. பாடகர்கள் இசைத் தட்டுக்கென்று தனியாக பாடுவார்கள்.
1937ம் ஆண்டு சிந்தாமணி படம் வெளிவந்து வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் பாடல் உரிமத்தை வாங்கியவர்கள் பாடலை உடனடியாக இசைதட்டாக வெளியிட விரும்பினார்கள். ஆனால் பாகவதர் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் இசைத்தட்டுக்கென தனியாக பாட முடியவில்லை. இதனால் இசை தட்டு நிறுவனத்தார். அப்போது தியாகராஜ பாகவதர் போன்று பாடக்கூடிய துறையூர் ராஜகோபால் சர்மா என்பவரை சிந்தாமணி படத்தின் பாடல்களை பாடச் செய்து இசை தட்டை வெளியிட்டனர். இசை தட்டின் மேல் சிந்தாமணி' பட பாடல்கள் என்று மட்டுமே எழுதியிருந்தனர். இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன் பெயரையோ பாடியதாக தியாகராஜ பாகவதர் பெயரையோ குறிப்பிடவில்லை.
அந்த பாடல்களை தியாகராஜ பாகவதர் பாடவில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் கொதித்தெழுந்து பாகவதருக்கு நூற்றுக் கணக்கில் கடிதம் எழுதி கடிந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாகவதர் இசைத்தட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருந்தார். பிரபலமான அந்த இசைத்தட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வழக்கு முயற்சியை கைவிட்டார். அதன் பிறகும் அவர் இசைத்தட்டுக்காக பாடவில்லை. சிந்தாமணி பட பாடல்களை இப்பொது கேட்டாலும் அது துறையூர் ராஜகோபால் சர்மா பாடிய பாடல்கள்தான். படத்தில் மட்டுமே பாகவதர் பாடியை கேட்க முடியும்.
0 comments:
Post a Comment