தியேட்டர் ஸ்டிரைக் : இயக்குநர் கண்ணன் கண்ணீர் பேட்டி
01 ஜூலை, 2017 - 11:02 IST
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் கண்ணன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை போன்ற படங்களை இயக்கியவர், இப்போது கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை கொண்டு, "இவன் தந்திரன்" என்ற படத்தை இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடத்தில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசு 30 சதவீதம் நகராட்சி கேளிக்கை வரியும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரைப்பட வர்த்தகசபை திங்கள் கிழமை முதல் காலவரையின்றி தியேட்டர்களை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இயக்குநர் கண்ணனை வெகுவாக பாதித்திருக்கிறது. இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், இவன் தந்திரன் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். திங்கள் முதல் தியேட்டர்கள் இயங்காது என்று சொல்கிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படி திடீரென அறிவித்தால் என்ன செய்வது, இந்தப்படத்திற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது. படம் நன்றாக இருக்கிறது என்று ரிசல்ட் வருகிறது. ஆனால் இந்த அறிவிப்பால் என்ன செய்வது என்றே தெரியவில்லை, எனக்கு யாரிடம் போய் பேசுவது என்றே தெரியவில்லை. விக்ரமன், சமுத்திரகனி, செல்வமணி போன்றவர்கள் ஏதாவது செய்யுங்கள்... என்று கண்ணீர் விட்டு அழுதபடி பேசியிருக்கிறார்.
0 comments:
Post a Comment