'சி 3'-க்கு செக் வைத்த அரசியல் நிலவரம்
10 பிப்,2017 - 17:54 IST
'சி 3' படத்தை எந்த நேரத்தில் வெளியிடலாம் என முடிவு செய்து தேதியை அறிவித்தார்களோ அன்றிலிருந்து அந்தப் படத்திற்கு சோதனை மேல் சோதனைதான். கடந்த வருடம் தீபாவளி அன்றே படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். அதன் பின் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' படத்தை வெளியிட முடிவு செய்து 'சி 3' வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். அதன்பின் டிசம்பரில் வெளியிட முடிவு செய்தார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என தள்ளி வைத்தார்கள். பொங்கல் அன்றும் வெளியிட முடியாமல் ஜனவரி 26 ரிலீஸ் என்று அறிவித்தார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் அப்போதுதான் முடிந்த நிலையில் அதையும் மாற்றி கடைசியாக பிப்ரவரி 9ம் தேதியான நேற்று படத்தை வெளியிட்டார்கள்.
'சி 3' படத்தின் வெளியீட்டைத்தான் பல அரசியல் சம்பவங்கள், சூழ்நிலைகள் பாதித்தது என்று பார்த்தால் நேற்றும், இன்றும் படத்தின் வசூலை அதே அரசியல் சூழ்நிலைகள் குறைத்து வருகின்றன என்கிறார்கள். பொதுவாக வெள்ளிக் கிழமைகளில்தான் படங்களை ரிலீஸ் செய்வார்கள். படம் மீது எதிர்பார்ப்பு இருந்ததால் ஒரு நாள் முன்னதாக நேற்றே படத்தை வெளியிட்டார்கள். இந்த நான்கு நாட்களில் நல்ல வசூலை அள்ளிவிடலாம் என கணக்குப் போட்டார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் 'சி 3' படத்தில் இருக்கும் பரபரப்பு, விறுவிறுப்பு, பன்ச் வசனங்கள் ஆகியவற்றை விட பல மடங்கு அதிகமிருப்பதால் பலரும் டி.வி முன்னாலும், சமூக வலைத்தளங்கள் முன்னாலும் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது படத்தின் வசூலுக்கு 'செக்' வைத்தது போல் இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.
நாளை சனிக் கிழமையும், அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையும்தான் 'சி 3' வசூல் சிக்சர் அடிக்குமா என்பதை நிரூபிக்க உள்ள நாட்களாக இருக்கம் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment