சமூக வலைத்தளங்களில் கிண்டல் விமர்சனம்: நடிகர் சங்கம் கண்டனம்
24 அக்,2016 - 11:47 IST
ஒரு திரைப்படம் வரும்போது அந்த படத்தை பற்றிய விமர்சனம் முதல் ரீல் ஓடி முடிந்ததுமே சமூக வலைத்தளங்களில் "மாப்ளே... படம் சூப்பர்", "மாப்ளே.. வேஸ்ட்டுடா". என்று ஆரம்பிக்கிற விமர்சனங்கள், நடிகர், நடிகைகளை தனிப்பட்ட முறையில் கேலி கிண்டல் செய்கிற அளவிற்கு வந்து முடிகிறது. ஜே.எஸ்.கே.கோபி என்பவர் இதனை சட்டரீதியாக கையாண்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காலந்தொட்டே கலை விமர்சனங்களுக்கு உட்பட்டதுதான். ஆனால் சமீப காலமாக முறைப்படுத்தப்படாத சமூக வலைத்தளங்களில் மேம்போக்கான வெறும் பரபரப்பூட்டுகின்ற ஆழமற்ற வார்த்தை ஜோடனைகளே விமர்சனங்களாக வெளிவருகின்றன. பெரும் முதலீட்டோடு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் இத்தகைய விமர்சனங்களால் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. விமர்சனங்கள் மக்களின் ரசனையை தூண்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி விமர்சனங்களே பொழுதுபோக்காகிவிடக்கூடாது. அதுவும் ஒரு நடிகரையோ, நடிகையையோ, தொழில்நுட்ப கலைஞரையே தனிப்பட்ட முறையில் விமர்சனம் என்ற பெயரில் கேலி வார்த்தைகளை அள்ளித் தெளிப்பது கண்டிக்கத்துக்கது. ஜே.எஸ்.கே.கோபி எடுத்து வரும் முயற்சிக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment