கவலைப்படாதே சிவா, ஆண்டவன் பார்த்து கொள்வான் - சிம்பு
13 அக்,2016 - 18:03 IST
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, சிம்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரொமோ'. பிசி ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி என பிரமாண்ட கலைஞர்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்துள்ள படமும் இது தான். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதிலும் தொடர் விடுமுறையால் ரெமோ படத்தின் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது.
இதனிடையே ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அப்போது சிவகார்த்திகேயன், யார்கிட்ட இருந்தும் வெற்றியை திருடி வரவில்லை, கடினமாக போராடித்தான் வருகிறேன், தான் செய்யும் வேலையை சிலர் தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்ததோடு மேடையிலேயே கண்கலங்கவும் செய்தார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகார்த்திகேயனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால், சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு உரிய தீர்வு விரைவில் எட்டப்படும் என்று கூறினார். இப்போது நடிகர் சிம்புவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிம்பு தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛கவலைப்படாதே சிவா, இந்த பிரச்னை உனக்கு மட்டும் வரவில்லை. இதை செய்பவர்கள் யார் என்று எனக்கும் தெரியும். பிரச்னை செய்பவர்களுக்கு அது மட்டும் தான் தெரியும். நம்முடைய குறிக்கோள் கடின உழைப்பு ஒன்று மட்டும் தான், மற்றதையெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வார்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment