பிளாஷ்பேக்: நவராத்திரியும், நவரத்தினமும்
25 அக்,2016 - 12:14 IST
இயக்குனர் ஏ.பி.நாகராஜன் 1964ம் ஆண்டு இயக்கிய படம் நவராத்திரி. புராண பட இயக்குனராக அறியப்பட்ட ஏ.பி.நாகராஜன் எடுத்த சமூக படங்கள் மிகவும் வித்தியாசமானது. நவராத்திரியில் சாவித்திரிதான் மெயின் கேரக்டர். அவர் வாழ்க்கையில் வந்து செல்லும் 9 ஆண்களாக 9 கேரக்டரில் நடித்திருந்தார் சிவாஜி. இது ஒரு சரித்திர சாதனை. மனைவியை இழந்தவர், குடிகாரன், டாக்டர், துப்பாக்கி வீரன், கிராமத்து ஆள், தொழிலாளி, நடிகர், வேட்டைக்காரர் உட்பட 9 வேடம் தாங்கினார்.
நவராத்திரிக்கு பிறகு பல புராண படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் லாபத்தையும், நஷ்டத்தையும் மாறி மாறி சந்தித்தார். கடைசி காலத்தில் அவருக்கு கொஞ்சம் பண நெருக்கடி. அதனால் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம் என நண்பர்கள் சொன்னதும். எம்.ஜி.ஆரை சந்தித்தார் ஏ.பி.நாகராஜன். அவருக்கு உதவ முன் வந்த எம்.ஜி.ஆர் "சிவாஜி நடித்த நவராத்திரி எனக்கு பிடிக்கும். அவர் மாதிரி என்னால் நடிக்க முடியாது. நவராத்திரி கதையை அப்படியே திருப்பி போடுங்கள். ஒரு ஹீரோ ஒன்பது ஹீரோயின்கள் கதை தயார் செய்யுங்கள்" என்றார். அதுதான் நவரத்தினம்.
எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க லதா, ஜரினா வஹாப், பி.ஆர்.விஜயலட்சுமி, சுபா, ஸ்ரீப்ரியா, ஒய் விஜயா, ஜெயசித்ரா, குமாரி பத்மினி உள்பட 9 ஹீரோயின்கள் நடித்தார்கள். 1977ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
0 comments:
Post a Comment