2.0 முதல் பார்வை, கோபத்தில் ரசிகர்கள்
20 நவ,2016 - 19:08 IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் '2.0 படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என்று பல நாட்களாகவே அதிகமாக 'பில்ட் - அப்' கொடுத்து வந்தார்கள்.
ஒரு தமிழ்ப் படத்தின் விழாவை மும்பையில் நடத்தி, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் யாரையும் அழைக்காமல் யு டியூபில் நேரடி ஒளிபரப்பு நடத்துகிறோம் என்றார்கள். கடைசியில் நேரடி ஒளிபரப்பைக் கூட நடத்தத் தெரியாமல், வெறும் விளம்பரங்களை மட்டுமே ஒளிபரப்பி ரஜினி ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.
2.0 தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி என விளம்பரப்படுத்தியவர்களால் கடைசியில் ஒரு யு டியூப் நேரடி ஒளிபரப்பைக் கூட சரியாகச் செய்ய முடியவில்லை. யு டியூப் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் கடும் கோபத்தில் கெட்ட, கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் போட்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் தொழில்நுட்பங்களை சிறந்த அளவில் பயன்படுத்தக் கூடிய இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தது தமிழ்த் திரையுலகத்திற்கு மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களுக்கும் அவமானமான ஒரு விஷயம்தான்.
சில வாரங்களுக்கு முன் அதே மும்பையில் 'பாகுபலி 2'வின் முதல் பார்வையை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார் ராஜமௌலி. ஷங்கரின் பெயரை கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி என்பதே உண்மை.
0 comments:
Post a Comment